கண்டியில் நடைபாதை திடீர் இடிவு; நால்வர் காயம்.!!!
கண்டி நகரில் பழைய சிறைச்சாலைக்கு முன்பாக அமைந்துள்ள நடைபாதையின் ஒரு பகுதி இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை திடீரென இடிந்து வீழ்ந்ததில், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
பாதசாரிகள் நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, அதன் தரைப்பகுதி திடீரென உள்வாங்கி இடிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நால்வரும் உடனடியாக மீட்கப்பட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடைபாதைக்கு அருகிலுள்ள வாய்க்காலில் அதிகளவு நீர்வரத்து காணப்பட்ட நிலையில், நடைபாதையின் கீழிருந்த மண் அரிப்புக்குள்ளாகி பலவீனமடைந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரும் நகரப் பாதுகாப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கண்டி நகரிலுள்ள நடைபாதைகளின் நிலைமையை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



