கிழக்கிலும் வாள்வெட்டு தாக்குதல்: இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்.!!!
● குற்றவாளிகளை உடன் கைது செய்ய கோரி வீதி மறியல் போராட்டம்.
கிழக்கு மாகாணத்தில் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம் தொடரும் நிலையில், வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை கைது செய்து நீதியை வழங்கக் கோரி இன்று (05) காலை 10.30 மணியளவில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரடியனாறு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை வயல் பகுதியில் கடந்த மாதம் 16.01.2026 இரவு வேளையில், இனம் தெரியாத குழுவினரால் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பகிரதன் என்பவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அவரது இறுதிக்கிரியை அவரது இல்லத்திலிருந்து வந்தாறுமூலை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட வேளையில், உழவர் சிலை அமைந்துள்ள அம்பலத்தடி சந்தி பகுதியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிரதான வீதியை மறித்து சில மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, சம்பவம் இடம்பெற்று 20 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் முறையாக கைது செய்யப்படவில்லை, விசாரணைகளில் பக்கச்சார்பு நிலை காணப்படுவதாக, உயிரிழந்தவருக்கு உடனடி மற்றும் நியாயமான நீதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றொரு நபரும் சம்பவம் தொடர்பான உண்மை நிலைகளை உறுதிப்படுத்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் கடமை என இறந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வாள்வெட்டு சம்பவத்தை நாட்டின் கௌரவ ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் காரணமாக, பிரதான வீதி ஊடாக சென்ற வாகனங்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததும் அவதானிக்கப்பட்டது.