காத்தான்குடியில் டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்த; 3 நாட்கள் விசேட பரிசோதனை நடவடிக்கை.!!!
● பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
– எம்.ரி.எம்.யூனுஸ் –
காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், 07, 08, 09 ஆகிய மூன்று தினங்களில் விசேட டெங்கு பரிசோதனை மற்றும் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நஸீர்தீன் நேற்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது மழை அதிகரித்துள்ளமையால் டெங்கு பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விசேட பரிசோதனை நடவடிக்கை டெங்கு விசேட செயலணி மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், பொதுமக்கள் தங்கள் இல்லங்களையும் சுற்றுப்புறங்களையும் தாங்களாகவே சுத்தப்படுத்தி, டெங்கு பரவும் இடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், இதனை தவறினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி எச்சரித்தார்.
இந்த மூன்று தின விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ்,
07ம் திகதி (புதன்கிழமை): வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள்,
08ம் திகதி (வியாழக்கிழமை): பாடசாலைகளில் டெங்கு பரிசோதனைகள்,
09ம் திகதி (வெள்ளிக்கிழமை): பள்ளிவாயல்கள், மையவாடிகள் மற்றும் மதரஸாக்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு பரவக்கூடிய இடங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் டெங்கு பரவல் அபாயம் அதிகமாக இருப்பதால் அவசரமாக இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் இடங்களை தாங்களே சுத்தப்படுத்தி, உயிர் கொல்லி டெங்கு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
இந்த விசேட வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலகம், நகரசபை, கல்வி அலுவலகம், பொலிஸ் துறை, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம், காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்து செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ். சில்மியா, காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி றினோஸா முப்லிஹ், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.சி.எம்.ஏ. சத்தார், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹாரிஸ், ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாக உறுப்பினர் யூ.எல்.எம். இன்சுதீன், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







