இந்தியாவில் கோர விபத்து: திருமணமாகி 10 நாட்களேயான காத்தான்குடி புதுமணத் தம்பதியினர் படுகாயம்; பொறியியல் மாணவர் பலி.!!!
காத்தான்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட, திருமணமாகி வெறும் 10 நாட்களேயான இளம் பெண்ணும் அவரது கணவரும் இந்தியாவின் தமிழ்நாடு, மயிலாடுதுறை பகுதியில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி காயமடைந்திருந்த குறித்த இளம் பெண்ணின் தந்தையைப் பார்வையிடுவதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனரக வாகனமொன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொறியியல் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புதிதாகத் திருமணமான இளம் பெண்ணும் அவரது கணவரும் படுகாயமடைந்த நிலையில், இளம் பெண் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் குற்றாலம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருமணமாகி 10 நாட்களே கடந்த நிலையில், இளம் தம்பதியினர் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் அறிந்தவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.