துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை: கடற்படை ஒத்துழைப்பு.!!!
(கற்பிட்டி எம். எச். எம். சியாஜ்)
அம்பாறை மாவட்டத்தின் பானம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க இலங்கை கடற்படை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
அம்பாறையின் பானம பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவனத்திற்கு அருகிலுள்ள முகாம் வளாகத்தில் காயமடைந்த நிலையில் காட்டு யானை ஒன்று நடமாடிக்கொண்டிருந்ததை கடற்படை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அம்பாறை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து காட்டு யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது பாதுகாப்பு மற்றும் பிற தேவையான உதவிகளை இலங்கை கடற்படை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்திருந்த காட்டு யானையின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




