சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது; 1,740 கடல் அட்டைகள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்த இருவர், 1,740 கடல் அட்டைகள் மற்றும் படகு ஒன்றுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் கடந்த சனிக்கிழமை (12) மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வடக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பலான ‘கஞ்சதேவ’ நிறுவனத்தைச் சேர்ந்த கடற்படையினர், ஊர்காவல்துறை – அல்லைப்பிட்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதலின்போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு தரையிறக்கிக் கொண்டு செல்லப்பட்ட 1,740 கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றுடன் தொடர்புடைய அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 41 மற்றும் 46 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

