பாதுகாக்கப்பட்ட வனவிலங்கைக் கொன்ற சம்பவம்; ஆசிரியரின் துரித நடவடிக்கையால் இருவர் கைது – மெதிரிகிரியவில் சம்பவம்.!!!
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான எறும்புத்தின்னி (Pangolin) ஒன்றைக் கொலை செய்த சம்பவம் தொடர்பான காணொளி, பாடசாலை மாணவர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் இருப்பதை ஆசிரியர் ஒருவர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, மெதிரிகிரிய பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எறும்புத்தின்னியைக் கொலை செய்யும் காணொளி அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பரவி வந்ததாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மெதிரிகிரிய பொலிஸாரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பல வீடுகள் மற்றும் இடங்களில் அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் அழிந்துவரும் வனவிலங்குகளின் பட்டியலில் எறும்புத்தின்னியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சுற்றாடல் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வனவிலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தட்டிக்கேட்பதிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும் அக்கறையுடன் செயற்படும் பொதுமக்களுக்கும் அமைச்சு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.