ஏறாவூர்–காத்தான்குடியில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் – இருவர் கைது.!!!
ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் ஐஸ் (Methamphetamine) போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர், 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (23) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரும் சட்டத்தரணியுமான வர்ண ஜயசுந்தரின் ஆலோசனையுடன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலா ரத்னாவின் வழிகாட்டலில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.கே. திலகரெத்தின மற்றும் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமீர தலைமையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இரு குழுக்களும் சம்பவ தினமான நேற்று இரவு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், காத்தான்குடி பகுதியிலும் ஒரே நேரத்தில் மாறுவேடத்தில் வீதி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
இதன் போது, காத்தான்குடி எப்.சி. வீதியில், போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற 26 வயதுடைய வியாபாரி ஒருவர், 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார்.
மேலும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில், மற்றொரு வியாபாரி, 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.