போட்டிபோட்டு சென்ற இரு பேருந்துகள் மோதி விபத்து; கடைக்குள் புகுந்த பேருந்து.!!!
திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (30) களுதாவளை கடற்கரை வீதி (Beach Road) சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை–கல்முனை வீதியில் இரண்டு பேருந்துகளும் போட்டிபோட்டுக்கொண்டு அதிவேகமாக பயணித்ததாகவும், இதன்போது இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோதலின் பின்னர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த கோழிக்கடை ஒன்றின் மீது மோதி, கடையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளது.
திடீரென இடம்பெற்ற இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. எனினும், கடையில் இருந்தவர்கள் மற்றும் வீதியில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து பேருந்துகளை போட்டிபோட்டுக்கொண்டு செலுத்துவதாகக் கூறப்படும் ஆபத்தான போக்குக்கு அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகவும், சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

