வேகக் கட்டுப்பாட்டை இழந்த பல்சர் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து: இருவர் பலி.!!!
யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை சுமார் 4 மணியளவில் அளவெட்டி அலுக்கை சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் அளவெட்டி நோக்கிப் பயணித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த மதிலுடன் மோதியுள்ளது.
மோதலின் வேகத்தில் மதில் இடிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சுன்னாகம் மற்றும் நீர்வேலி பகுதிகளைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய் (16) மற்றும் ரஜீவன் (36) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் பயணித்த மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இளைஞர்களின் திடீர் மரணத்தால் துயரமடைந்த பெற்றோர்களும் உறவினர்களும் வைத்தியசாலையில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதிவேகப் பயணம் மற்றும் கவனக்குறைவு ஆகியவை விபத்துக்கான காரணங்களாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வீதிப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதும், வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிப்பதும் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானதாகும்.