சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்: காத்தான்குடியில் தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
(எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்)
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட வறிய மற்றும் மிக வறிய குடும்பங்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (16) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
சமுர்த்தி திணைக்களத்தின் சமூக வலுவூட்டல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக 24 குடும்பங்களுக்கு ஆடை உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தி தயாரிப்புக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். தனூஜா, கணக்காளர் ஏ.ஆர். அகமட் முப்லி, மீன்பிடி அமைச்சின் இணைப்பாளர் எம். நசீர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் ஆர். வாமதேவன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஏம்.எம். சுல்மி, எஸ்.எச்.எம். முஸம்மில் உள்ளிட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு, வறிய குடும்பங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்தது என கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

















