ஜனவரி மாத எரிபொருள் விலை திருத்தம் குறித்து இதுவரை தீர்மானம் இல்லை – கனியவளக் கூட்டுத்தாபனம். !!!
ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இதுவரை எவ்விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில், தேசிய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் முறையான திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான இறக்குமதிகள் ஊடாக நாட்டின் எரிபொருள் இருப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் களஞ்சிய வசதிகளுக்கேற்ப 20 முதல் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சமீப காலமாக நிலவி வரும் அதிதீவிரமான வானிலை காரணமாக எரிபொருள் இருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இதுவரை எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், கிடைக்கப்பெறும் தரவுகள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் விலை திருத்தங்கள் தொடர்ச்சியான செயன்முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த தகவல்களை ஆங்கில ஊடகமொன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.