மட்டக்களப்பில் 13 வயது சிறுமி தற்கொலை – மாவட்டத்தில் 8 மாதங்களில் 105 உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வந்த குறித்த சிறுமி, வெளிநாட்டில் வேலை செய்து வரும் தந்தை, தனது இரட்டை சகோதரிக்கு ஆடைகள் வாங்க பணம் அனுப்பிய நிலையில், தமக்கு வழங்காதது குறித்து மனமுடைந்து, நேற்று மாலை 5.45 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு (2024) ஜனவரி 1ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை மட்டக்களப்பில் 48 பெண்கள் உட்பட 172 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பெண்கள் மற்றும் 12 வயது சிறுவன் ஒருவரை உள்ளடக்கி மொத்தம் 105 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை சம்பவங்களில் மட்டக்களப்பு மாவட்டம் நாடு முழுவதும் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.