இலங்கையில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு 24 மணிநேர விசேட பாதுகாப்பு: காவல்துறை உத்தரவு.!!!
நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு 24 மணித்தியால விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய அனைத்து காவல்நிலையங்களுக்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் அல்லது போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சநிலையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முக்கியமான நகரப் பகுதிகள் மற்றும் சுற்றுலா மையங்களிலும் காவல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.