நுகர்வோருக்கு மேலும் ஒரு விலை அதிர்ச்சி: டிசம்பரில் முட்டை விலை ரூ. 45 – 47 ஆக அதிகரிக்கலாம்.!!!
இலங்கையில் முட்டையின் விலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முட்டை 45 முதல் 47 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலைகள் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளமை விலை உயர்வுக்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உற்பத்தியில் ஏற்படும் நஷ்டத்தைக் குறைத்துக்கொள்ளும் நோக்கில் சில கோழிப் பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி குறைந்து சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் முட்டைக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், சந்தையின் மொத்தத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சவால்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுமக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் முட்டை மற்றும் கோழி இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.