எரிபொருள் நுகர்வை குறைக்க பொதுமக்களிடம் கோரிக்கை – பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர்.!!!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் மோதல்களால் உருவாகியுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, பொதுமக்கள் முடிந்தவரை எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தம்மால் இயன்றவரை எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தமை இந்த விலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு அதிகளவில் கொள்வனவு செய்யப்படாதிருந்தால், இந்த மாத இறுதி வரை பழைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய முடிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி உலகம் முழுவதையும் பாதித்துள்ளதால், இதனை சமூகவாசிகள் அனைவரும் இணைந்து சமாளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்துமாறு பொதுமக்களிடம் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.