மக்கள் ஆதரவு எம்முடன் இருக்கும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – கந்தசாமி பிரபு.!!!
மக்கள் சக்தி எம்மோடு இணைந்திருக்கும் வரை, கடந்தகால ஆட்சியாளர்களால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்று (29) மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரம் தங்களாலேயே கிடைத்தது போன்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்தகால ஆட்சியாளர்கள் நாட்டை எந்த நிலைக்குக் கொண்டு சென்றார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், தமது ஆட்சிக் காலத்தில் மக்களுக்காக முன்னெடுத்த நலத்திட்டங்கள் என்ன, ஏன் மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றினார்கள் என்பது குறித்து அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்தகால ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, அரச கஜானாவை காலியாக்கி, நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றதாகவும், மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் அக்காலத்தில் அரசியல் பயணங்களை முன்னெடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் ஊழலை ஒழிப்பதற்கும், வீண் விரயங்களைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதுடன், மக்களுக்குத் தேவையான பணிகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே அரசியல் அதிகாரம் தீர்மானிக்கப்படும் எனவும், அதுவரை எதிர்க்கட்சியினரால் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்த முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.