மயிலம்பாவெளியில் மாட்டுடன் மோதி கார் விபத்து – ஒருவர் காயம், மாடு உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று, இன்று (14) காலை மட்டக்களப்பு – மயிலம்பாவெளி பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. மேலும், காரில் பயணித்த சிலர் காயமடைந்த நிலையில், அவசர சேவை நோயாளர் காவு வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான வீதிகளில் மாடுகளுடன் மோதி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நிலவுவதால், சூட்டுக்காக மாடுகள் அதிகமாக பிரதான வீதிகளை நாடி வருவதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
வீதிப் போக்குவரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் போதிலும், கட்டுப்பாடின்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து சமூகத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.



