மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகள்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண மட்ட சிறார்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (09) வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான ஜெ.எஸ். அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். ஆர். ஹசந்தி தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகள், கிழக்கு மாகாண ஆரம்ப பிரிவிற்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் கே. ஜெயவதன் ஒருங்கிணைப்பிலும், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றன.
வலய மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கான இப்போட்டிகளில், கிழக்கு மாகாணத்தின் 17 வலயங்களைச் சேர்ந்த 1836 மாணவர்களும் 153 அணிகளும் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வேகமாய் தடைதாண்டி ஓடுதல், நின்று நீளம் பாய்தல், தட்டம் பாய்தல், முழங்கால் ஊன்றி பந்து எறிதல், தாம்பு தாண்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வின்போது சிறார்களின் கண்கவர் நடனங்கள் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்ததோடு. இப்போட்டிகள் சிறார்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றன.




