காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு.!!!
(கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்)
ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பாடசாலைக்கு பின்புறமுள்ள பகுதியில் இன்று (02) அதிகாலையில் இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் உயிரிழந்தவர் ஆனமடுவ – சியம்பலாகஸ்ஹேன பகுதியைச் சேர்ந்த ஹெட்டிபதிரென்னஹெலகே நைதேஹமிகே ரம்பண்டா (66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி தனது கணவர் உயிரிழந்ததாக இறந்தவரின் மனைவி ஆனமடுவ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆனமடுவ பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காட்டு யானை அட்டகாசங்களால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
சியம்பலாகஸ்ஹேன மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பகலும் இரவும் காட்டு யானைகள் அலைந்து திரிவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இந்த காட்டு யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறுவதால் மக்கள் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்துடனும், முந்தைய அரசாங்கங்களுடனும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தால் இம்முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.