வன்முறை பேச்சு வழக்கில்: சுமணரட்ன தேரர் நீதிமன்றத்தில் சரண் – பிணை உத்தரவு.!!!
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) சரணடைந்ததை அடுத்து, அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியுடைய இருவர் கொண்ட சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2023 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவியில், வடக்கிலும் தெற்கிலும் வாழும் தமிழ் மக்களை “வெட்டிக் கொல்ல வேண்டும்” என வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை அம்பிட்டிய சுமணரட்ன தேரர் வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையான கருத்துகளுக்கு எதிராக, 2023 ஒக்டோபர் 27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் இயங்கும் சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் குறித்த தேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. எனினும், வழக்கு விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், 15.12.2025 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து, வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், இது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மேல் நீதிமன்ற பிடிவிறாந்து நடைமுறையில் இருக்கும் நிலையில், அம்பிட்டிய சுமணரட்ன தேரர் இன்று மூன்று சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி அவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியுடைய இருவர் கொண்ட சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து, வழக்கை 2026 ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை, பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50 பேர் கொண்ட குழுவுடன் குறித்த தேரர் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.