T20 தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை 2-1 கணக்கில் வெற்றி – இறுதி ஆட்டம் மழை காரணமாக ரத்து.!!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி T20 ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 5 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 5ஆவது மற்றும் கடைசி T20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பனில் இன்று (08) நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியின் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திலக் வர்மா நீக்கப்பட்டு ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.
துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. பென் டுவார்ஷுயிஸ் வீசிய 3ஆவது ஓவரில் ஷுப்மன் கில் 4 பவுண்டரிகள் அடித்தார். நேதன் எலிஸ் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்தை அபிஷேக் சர்மா மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மின்னல் காரணமாக காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் குறுக்கிட்டது.
அப்போது அபிஷேக் சர்மா 23, ஷுப்மன் கில் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக அபிஷேக் சர்மா 5 ஓட்டங்கள் இருந்த போது பென் டுவார்ஷுயிஸ் பந்தில் மிட் ஆஃப் திசையில் கொடுத்த எளிதான கேட்ச்சை கிளென் மேக்ஸ்வெல் தவறவிட்டார். இதன் பின்னர் அபிஷேக் சர்மா 11 ஓட்டங்களில் இருந்த போது நேதன் எலிஸ் பந்தில் ஃபைன் லெக் திசையில் கொடுத்த கேட்ச்சை பென் டுவார்ஷுயிஸ் தவறவிட்டார்.
தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதையடுத்து போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றி கிண்ணத்தை வென்றது. கான்பராவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக இரத்தாகியிருந்தது. மெல்பர்னில் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
ஹோபர்ட்டில் நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கோல்டு கோஸ்டில் நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் 48 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.





