பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் விபத்து: மலைப்பகுதியில் பாகங்கள் கண்டுபிடிப்பு.!!!
11 பேருடன் பறந்து கொண்டிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்தால் இயக்கப்படும் ATR 42-500 வகையைச் சேர்ந்த விமானம், யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
விமானம் புறப்பட்டு சுமார் 12 மைல்கள் பயணித்த பின்னர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இருந்த தொடர்பு மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டதுடன், ரேடார் கண்காணிப்பிலிருந்தும் விமானம் மறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன விமானத்திலிருந்து கடைசியாக பெறப்பட்ட சமிக்ஞை, உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணியளவில் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விமானம் கடைசியாக அறியப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள மரோஸ் ரீஜென்சியின் மலைப்பகுதிக்கு மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, மலையின் ஒரு பகுதியில் விமானத்தின் சில பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை இந்தோனேசிய அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வரும் நிலையில், அந்த விசாரணைகளுக்கு ஆதரவாக ATR நிறுவனத்தின் நிபுணர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலைப்பகுதியில் மோதி எரிந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.