அரசியல்வாதி மக்களுக்கானவரா??? கட்சிக்கானவரா???
அரசியல்வாதிகள் என்பவர்கள் எப்போதுமே மக்கள் நலன்சார்ந்து இயங்க வேண்டியவர்கள். மக்களின் தேவைகள் என்னவோ அதனை முக்கியத்துவப்படுத்தி இயங்குகின்ற அரசியல்வாதிகள் நிச்சயமாக மக்கள் மனங்களில் ஆழ ஊடுருவி நீண்டகாலம் நிலைத்து நிற்பார்கள் என்பது உண்மை.
கட்சி ரீதியாகவோ அல்லது சுயேட்சைக் குழுவாகவோ அரசியலுக்கு வருகின்ற நபர்கள் தேர்தலில் வெற்றிபெறும் சந்தர்ப்பங்களில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், குறை, நிறைகளை ஆராய்ந்து, மக்களின் அன்றாட தேவைகளை உணர்ந்து செயல்படுவது அத்தியவசியமாகின்றது.
கட்சி என்பது ஒரு தடமாகவும், களமாகவும் மாத்திரமே அரசியல்வாதிகளுக்கு இருக்க முடியும். அவை கொண்டிருக்கின்ற கொள்கைகள், கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், சமூகத்தின் மீதான பார்வை, கட்சியின் யாப்புகள் அத்தனையையும் பின்பற்ற வேண்டியது அரசியல்வாதியின் கடமையும், பொறுப்புமாகும்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தேசிய ரீதியில் தோற்றம்பெற்ற தேசிய கட்சிகளும், இன ரீதியாக தோன்றிய சிறுபான்மை கட்சிகளும் இலங்கையின் அரசியலில் பல்வேறு தாக்கங்களையும், மாற்றங்களையும் தோற்றுவித்தது எனலாம்.
மக்களின் இருப்புக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுபான்மை கட்சிகள் அல்லது இன ரீதியாக தோன்றிய கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அவர்களின் உரிமைகள், தேவைகளை பூர்த்தி செய்திருக்கின்றது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
அரசியல்வாதிகளும், தொண்டர்களும், தீவிர ஆதரவாளர்களும் கட்சிக் கொள்கைக்கு விசுவாசமாக செயற்பட வேண்டியதும், தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் கடமையாகிறது.
தன் இருப்புக்காக கட்சியில் சேர்ந்து, கட்சியின் பெயரால் வெற்றியும் கண்டு, அதன்மூலமாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, சுகபோகங்களை அனுபவித்து தனக்குப் பிடிக்காத சந்தர்ப்பங்களில் அல்லது தனக்கான அரசியலுக்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காத போது கட்சியை விட்டு வெளிநடப்பு செய்து, தலைமையை விமர்சித்து, கட்சிக்குள்ளே பிரிவினைகள், குழறுபடிகளை தோற்றுவித்து, நிறையவே காட்டிக்கொடுப்புக்களை செய்து தான் ஊருக்கு சேவை செய்யவந்த மகான் போல பம்பரமாய் சுற்றித்திரிவதும் எந்தவகையில் நியாயமாகும்.
கூடவே அந்த கட்சியோடும், அரசியல்வாதியோடும் சுற்றித்திரிந்து ஜால்ரா அடித்துவிட்டு, அடுத்தவர்களோடு பகைப்பட்டு, அவர்தான் உரிமைக்காக குரல் கொடுக்கும் மகானென நற்சான்று பத்திரமும் கொடுத்துவிட்டு, பிரிந்ததும் சந்திக்கு சந்தி நின்று மேடை இட்டு அவர் குறைநிறைகளை சொல்வதில் எந்தளவு உண்மை இருக்கப்போகிறது.
எவர் ஒன்றில் பயணிக்க வேண்டுமாக இருந்தாலும் அதற்கான தளமும், களமும் அத்தியவசியமாகின்றது. அதனை கட்சி செய்கிறது. எனவே கட்சியின் விசுவாசியாக அரசியல்வாதி செயற்படுவதோடு, மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளிலும், மக்களின் தேவைகளையும் அறிந்து செயற்படவேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பும், கடமையுமாகும்.
அரசியல் கட்சிகள் எப்போதும் மக்களுக்காக செயற்பட வேண்டும். ஆனாலும் மக்கள் கட்சிக்காக செயற்பட வேண்டியதில்லை. மக்கள் விரும்பின் தான் விரும்பிய கட்சிக்கு கால சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வார்கள். ஆக மக்களின் மனதை கவரும் வகையில் கட்சிகள் செயற்பட வேண்டியது அத்தியவசியமாகும்.
அதுபோல மக்கள் நலனில் அக்கரை கொண்டு, மக்கள் தேவைகளை உணர்ந்து , மக்களோடு மக்களாக சங்கமித்து, மக்கள் படுகின்ற இன்னல்கள், துன்பங்கள், துயரங்களின் போது பங்காளியாக மாறி, மக்களோடு புன்னகித்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் நல்ல திட்டங்களை கொண்டுவருகின்ற போது அதற்கான ஆதரவை கொடுக்கின்ற அரசியல்வாதிகள் வந்தால் பிரதேசம், மாவட்டம், மாகாணம், தேசியம் அபிவிருத்தியை நோக்கி நகரும் என்பதில் சந்தேகமே இல்லை.
-எம்.ரி.எம்-