அபிவிருத்தி என்பது மக்களுக்கானதா?? அரசாங்கத்துக்கானதா???
அபிவிருத்தி என்பது ஒரு நாட்டின் முக்கிய அச்சாணியாகும். நாட்டில் அபிவிருத்தி இடம்பெறவில்லை என்றால் அந்த நாடு வளர்ந்த நாடாக பார்க்கப்படுவதில்லை. தனி மனிதனில் ஆரம்பித்து சமூக மட்டம் வரை நகர்கின்ற அல்லது தொடர்கின்ற உச்சபச்ச மாற்றங்களே அபிவிருத்தி எனும், சமரச வலைக்குள் சிக்கிக் கிடக்கின்ற ஒரு சமாச்சாரம் ஆகும்.
நாட்டின் அபிவிருத்தியானது சமூக, பொருளாதார, சூழல், பிரதேச, கல்வி போன்ற அத்தனை துறைகளிலும் உச்சம் தொடுகையில் அங்கு நல்லதொரு சமூகம் உருவாகும். இல்லையேல் எல்லாத் துறைகளும் வீழ்ச்சியை நோக்கியே நகரும். ஆக அபிவிருத்திகள் ஒரு நாட்டின் கண் ஆகும்.
ஒரு நாட்டில் சமூக, பொருளாதார, சூழல், பிரதேச, கல்வி போன்ற இத்துனை துறைகளும் வளர்ந்தாலே நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறிவிடும். ஒரு சமூகம் எழுச்சியடைய வேண்டுமாக இருந்தால் அந்த சமூகம் கல்வியின் பால் முன்னோக்கி எழுந்து நடக்க வேண்டும். அப்போதுதான் புரிதல் எனும் நெடும் கயிறு நீண்டு, நெடுத்து, உயர்ந்து நிற்கும்.
சமூக மட்டத்தில் அபிவிருத்தியை ஒரு அரசாங்கம் கொண்டுவந்து நடைமுறைப்படுத்துகின்றபோது, அவற்றை நல்லமுறையில் கட்டிக்காக்கின்ற தலைமுறை உருவாகும். வெறுமனே வீதிகளை செப்பணிடுவதும், கட்டிடங்களை கட்டுவதும் அபிவிருத்தியாகி விட முடியாது.
முதலில் அபிவிருத்திகளை செய்கின்றபோது சரியான திட்டமிடல்கள் அவசியமாகின்றது. ஆளுக்கு ஆள் திட்டங்களை கொண்டுவந்து நீயா நானா நடைமுறைப்படுத்துவது என்ற கோசங்களோடு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது முதலும் கோணல் முற்றும் கோணல் என மாறிவிடுகின்றது. திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது முதலில் துறைசார்ந்தவர்களோடு கதைத்து, எது சரி எது தவறு எதுவென அலசி ஆராய்ந்து, உறுதிப்பட முடிவுகளை எடுத்த பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தோடு மக்கள் மன்றில் சமர்ப்பித்து, மக்கள் கருத்துக்களை கேட்டு, தெளிவூட்டல்களை செய்து அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போது நிச்சயம் அத்திட்டம் வெற்றியடையும், அத்தோடு நீண்டகால பாவனைக்கேற்ற வகையில் அபிவிருத்திகள் நிலைத்து நிற்கும்.
கட்டடங்களை கட்ட வேண்டும் அல்லது அபிவிருத்தி பணிகளை உடன் நிறைவேற்ற அல்லது நடைமுறைப்படுத்த வேண்டுமென நினைக்கின்றபோது தேவையற்ற அபிவிருத்திகளும் நடந்தேறி விடுகின்றன.
சமகாலத்தில் மக்களுக்கு எந்த தேவை இருக்கின்றதோ அதை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் நிறைவேற்றுவது கட்டாய கடமையாகும். அத்தோடு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோர் கண்காணித்து நடைமுறைப்படுத்துகின்றபோது அந்த அபிவிருத்திக்கு நிச்சயம் கிராக்கி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கிடைக்கின்ற நிதி ஒதுக்கீடுகளை பிரதேசம், மாவட்டம், மாகாணம், தேசியம் ரீதியாக கொண்டுவந்து சமர்ப்பிப்பதும், அமுல்படுத்துவதும், நிறைவுற்ற அபிவிருத்திகளை மக்களிடம் சமர்ப்பிப்பதுமே ஆகும். இதனை பொறுப்பேற்கின்ற நிறுவனங்கள், பொது மக்கள் நிச்சயமாக இந்த அபிவிருத்திகளை சிதைவின்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனினதும் கட்டாய கடமையாகும்.
ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடந்தேறி இருக்கின்ற அபிவிருத்திகளை எடுத்து நோக்குகின்ற போது மக்கள் இதனை சரியாக பயன்படுத்தினார்களா??? பாதுகாத்தார்களா??? என்ற கேள்வி எப்போதுமே எழுகிறது.
எந்த அபிவிருத்தியாக இருந்தாலும், எந்த செயற்பாடாக இருந்தாலும் நூறு வீதம் சரியான முறையில் நடைமுறைப்படுத்திவிட முடியாது. சில குறைகளும், நிறைகளும் இருக்கத்தான் செய்யும். கிடைக்கின்ற வளங்களைக் கொண்டு , நல்ல உருப்படியான, மக்கள் பிரயோசனமும், பலனும் அடையக்கூடிய அபிவிருத்திகளை எந்தக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி கொண்டுவந்தாலும் அவற்றை புன்முறுவலோடு ஏற்கின்ற மனநிலை அரசியல் தலைவர்களிடம் உருவாக வேண்டும். அப்போதுதான் நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்.
ஆக அரசாங்கமானது வரவு, செலவு திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை அரசியல்வாதிகள், மக்களுக்கு உரிய முறையில் அபிவிருத்திகளை கொண்டு வந்து சேர்ப்பதோடு, மக்களும் அந்நிதியின் மூலம் கிடைக்கின்ற அபிவிரூத்திகளை முறையாக பயன்படுத்தும்போது நாடு செழிப்போடு மாறும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
-எம்.ரி.எம்-