காத்தான்குடி கடற்கரையும்; பொதுமக்களின் அசமந்தப் போக்கும்.!!!
இறைவன் இயற்கையாக காத்தான்குடி மக்களுக்கு கொடுத்த பெரும் வரம் கடலும், ஆறும் ஆகும். கடலையும், ஆறையும் நம்பித்தான் தனது ஜீவனோபாயத்தை மீனவர்கள் நடத்தி வருகிறார்கள். இவைகளை விடவும் காத்தான்குடி மக்களால் நேசிக்கப்படுகின்ற, அனைத்து வயதினராலும் விரும்பப்படுகின்ற ஒன்றுதான் காத்தான்குடி கடற்கரை ஆகும்.
ஓய்வு நேரத்தில் இன்பமுடன் இருக்க, மனதை ஒருநிலைப்படுத்த, சிந்தனைகளை சாந்தமாக மாற்றிக்கொள்ள, சுவாரஸ்யமாய் கூடி நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் குட்டிக் கதைகள் பேச, ஜாலியாக அமர்ந்து மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்க அல்லது அடுத்தவர்களிடம் ஒப்புவிக்க அதைவிடவும் குடும்ப சகிதம் வந்து போகின்ற சிறந்த இடமாகவும் இருப்பது கடற்கரைதான்.
வெள்ளி மற்றும் பெருநாள், விடுமுறை நாட்கள் வந்தால் காத்தான்குடிக்கு பெரும் மவுசு இருக்கிறது. உள்ளூர், வெளியூர், தேசிய, சர்வதேச மக்கள் வந்து குவிகின்ற சுற்றுலாத் தளமாகவும், காத்தான்குடிக்கு வருவேர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்ற காட்சிகளை பார்க்க கோடிக்கண்களை வைத்துப் பூட்டினாலும் இலகுவில் கடந்துவிடவும் முடியாது.
உள்ளூர் மற்றும் தேசிய ரீதியில் சுற்றுலாத்துறையை விஸ்தரிக்க அரசு என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், கடற்கரைக்கு வருகை தருகின்ற மக்களின் மனங்களில் மாற்றங்கள் தோன்றாத வரை, செயற்படுத்துகின்ற திட்டங்கள் அல்லது நடைமுறைப்படுத்துகின்ற அபிவிருத்திப் பணிகள் யாவும் புஸ்வானமாகவே மாறிப்போகும்.
காத்தான்குடி கடற்கரைக்கு வந்து போகின்ற மக்கள், தங்களது ஓய்வுப் பொழுதை இன்பகரமாக கழித்துவிட்டு செல்லவே வருகின்றனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. வருகின்ற மக்களில் அநேகமானோர் தாங்கள் உண்ணவும், பருகவும் கொண்டு வருகின்ற உணவுகளை உட்கொண்டு விட்டு கழிவுகளை உரிய தொட்டிகளில் இடாமல், இருந்த இடத்திலேயே கழிவுகளை விட்டுச் செல்வது அடுத்தவர்களுக்கு பெரும் அசெளகரியத்தையும், மனச் சுழிவையும் ஏற்படுத்துகின்றது.
இதனால் கடற்கரைப் பிரதேசத்தை அதிகமதிகம் ஆட்சி செய்கின்ற கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் காத்தான்குடி கடற்கரைப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வருவோர் பலவாறான சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
உரிய முறையிலான வாகன தரிப்பிட வசதிகள் இல்லாமையால், சாரதிகள் தாங்கள் விரும்பிய இடங்களில் வாகனங்களை தரித்து விட்டு செல்வதால் வீதியால் பயணிக்கின்ற பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். அத்தோடு விபத்துக்களும் அதிகமதிகம் ஏற்படுகின்ற பிரதேசமாகவும், வாகன நெரிசல் அடிக்கடி ஏற்படுகின்ற இடமாகவும் காத்தான்குடி கடற்கரை மாறியுள்ளது.
பொதுமக்கள் மாலைப்பொழுதில் ஓய்வாகவும், சந்தோசமாகவும் இருப்பதற்காகவே கடற்கரைக்கு வருகின்றனர். சில விற்பனை நிறுவனங்கள் அல்லது விற்பனை முகவர்கள் தமது பொருட்களை விளம்பரப்படுத்த கடற்கரையை பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. அதாவது விளம்பரங்களை அதீத ஒலி, ஓளி ஊடாக காட்சிப்படுத்தப்படுவதும், மக்களை ஒன்றுகூட்டி சனநெரிசலை ஏற்படுத்துவதும் மக்களின் ஓய்வுக்கு பெரும் இடைஞ்சலாக மாறியுள்ளது.
அத்தோடு நடைபாதை வியாபாரிகள் தாங்கள் விரும்பிய இடங்களில் வியாபாரம் செய்வதால், வாகன நெரிசல் ஏற்படுவதோடு, திடீர் உணவுப் பொருட்களை விற்பனை (Fast Food) செய்யும் கடைகள் அதிகரித்துள்ளதால், மக்கள் பெரும் நோய்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் தோன்றியுள்ளது.
கடற்கரை என்பது “எமது வளம்; அதை நாமே பாதுகாக்க வேண்டும்” என்ற எண்ணக்கருவில் மக்கள் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. இதனை அமுல்படுத்த, நடைமுறைப்படுத்த நகரசபை இருக்கிறது என்ற சித்தார்ந்தத்தில் அல்லது வக்கிர புத்தியில் கடற்கரைக்கு வருகின்ற மக்கள் செயற்படுவது வேதனையே.
அரசானது தனது திட்டத்தினாடாக கடற்கரைப் பூங்காக்களை (Mini Beach Park) அமைத்து, மக்கள் தங்கள் ஓய்வு நேரங்களை இன்பமாக கழிக்க, நிம்மதியோடு இருக்க திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினாலும் மக்கள் மனங்களில் மாற்றங்கள் வரவில்லையாயின் என்னதான் திட்டங்களை வகுத்தாலும், அத்திட்டங்கள், செயற்பாடுகள் வெற்றியடையப் போவதில்லை.
நகரசபையானது தங்களது ஊழியர்கள், வாகனங்களை பயன்படுத்தி கடற்கரையை சுத்தப்படுத்தினாலும் வருகின்ற மக்கள் உரியமுறையில் கழிவுகளை உரிய இடங்களுக்கு கொண்டுபோய் சேர்க்காதவரை நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்களும், செயற்பாடுகளும் கேள்விக்குறியாகவே மாறிப்போகும்.
இதற்காக நகரசபையானது;
● கண்காணிப்பு கேமராக்களை (CCTV) பொருத்துதல்.
● கழிவுத் தொட்டிகளை அருகருகில் அமைத்தல்.
● கட்டாக்காலிகளை கட்டுப்படுத்தல்.
● வாகன தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தல்.
● வியாபாரிகளின் விற்பனைக்காக உரிய இடங்களை வழங்குதல்.
● விளம்பர வாகனங்களை தடைசெய்தல்.
● எமது பாரம்பரிய உணவுகளை ஊக்குவித்தல்.
● நடைமுறைப்படுத்துகின்ற திட்டங்கள், அபிவிருத்திகளை உரிய பராமரிப்பு செய்தல்.
● மக்களை விழிப்புணர்வூட்டும் பதாகைகளை காட்சிப்படுத்தல்.
● சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
இவ்வாறான திட்டங்களை செயற்படுத்துகின்ற போது நகரசபையானது தனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.
-எம்.ரி.எம்-