கனேதென்னையில் மண்சரிவு – கொழும்பு-கண்டி பிரதான வீதி மூடப்பட்டது.!!!
கொழும்பு – கண்டி பிரதான வீதி, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (22) காலை, கனேதென்னையில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நான்கு பேர் மீட்கப்பட்டு, மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்தில் இருந்த மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
சம்பவம் ஏற்பட்ட வர்த்தக நிலையம், சிற்றுண்டி மற்றும் தேநீர் அருந்த மக்களால் அடிக்கடி வருகை தரப்படும், அதிக நெரிசல் காணப்படும் இடம் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியை மக்கள் அணுக வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.