மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது – 70,000 மில்லிகிராம் போதைப்பொருள் பறிமுதல்.!!!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதைப்பொருளை மோட்டார் சைக்கிள் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில், 48 வயதுடைய ஒருவர் நேற்று (14) மாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறு போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த சந்தேக நபர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையார் வீதி, மலையாடி கிராமம் 02, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடமிருந்து 70,000 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கைப்பேசி (மொபைல் தொலைபேசி) ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.