அரசியல் தலையீடு இன்றி செயல்பட அதிகாரிகளுக்கு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அறிவுரை.!!!
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அரசியல் அழுத்தங்கள் இன்றி அரச அதிகாரிகள் சுயாதீனமாக செயல்பட்டு மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும் என சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டிலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் இன்று (25) நடைபெற்றது.
மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பாலம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த பாலத்தை மொறட்டுவ பல்கலைகழகத்துடன் இணைந்து ஆய்வு செய்து நிர்மாணிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் முந்தானையாறு திட்டம், நிறைவுறாத அபிவிருத்தித் திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், வீதி சமிஞ்சை விளக்குகள், காணி பிரச்சினைகள், கழிவு முகாமைத்துவம், குடிநீர் வழங்கல், ஆளணியினர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இதன்போது அமைச்சர் தெரிவித்ததாவது:
“உயர் அதிகாரிகளே என்னுடன் நேரடியாக கலந்துரையாடுங்கள். மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை முன்வையுங்கள். அரசியல் அழுத்தங்கள் இன்றி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மக்கள் சேவையை முன்னெடுக்க வேண்டும்” என பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தில் கிறவல் மற்றும் மண் அகழ்வு தொடர்பாக முறையான அடையாளப்படுத்தல் மற்றும் அனுமதி வழங்கல் அவசியம் எனவும், சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
கடந்த மழை வெள்ளத்தால் அறுவடை செய்யப்பட்ட நெல் உலர்த்த முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், நெல் உலர்த்திகள் கொள்வனவு செய்வது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதிகரித்து வரும் மனித–யானை மோதலைத் தடுக்கும் வகையில் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











