காத்தான்குடியில் “ரட்டம எகட்ட” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்.!!!
“ரட்டம எகட்ட” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி பொலிஸ் நிலையமும் இணைந்து விசேட விழிப்புணர்வு நடவடிக்கையை இன்று (06) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாளக அலககோன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இதில் பங்கேற்றனர்.
விஷ போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றாக கட்டுப்படுத்துதல், மேலும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது போதைப்பொருளின் அபாயம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், பொது இடங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.









