அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத் தலைவராக எஸ்.எம். ஆரிப் மீண்டும் தெரிவு.!!!
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவராக ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட கிரிக்கட் நடுவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் அம்பாறையில் அமைந்துள்ள “செனோன்றா” உணவகத்தில் அண்மையில் நடைபெற்றது. இலங்கை கிரிக்கட் நடுவர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 26 நடுவர்களைக் கொண்ட இச்சங்கத்தின் தலைவராக எஸ்.எம். ஆரிப் மீண்டும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாணத்திலும் தேசிய மட்டத்திலும் பல கிரிக்கட் போட்டிகளில் நடுவர் பணியாற்றி வரும் அவர், கடந்த காலங்களில் திறமையான கிரிக்கட் வீரராக பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
நிந்தவூரைச் சேர்ந்த இவர், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் கல்வி கற்று, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வியாபார மாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும், சம்மாந்துறை சிலியட் தேசிய நிறுவகத்தில் உயர் கணக்கியல் டிப்ளோமாவையும் பூர்த்தி செய்துள்ளார்.
தற்போது நிந்தவூர் அல்-மதீனா பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவர், தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, சங்கத்தின் பிரதித் தலைவர்களாக டமித் நாலக மற்றும் அஸ்வத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செயலாளராக சமன், பொருளாளராக இந்துநில் நந்திக, போட்டி செயலாளராக ருவன் பண்டார ஆகியோரும் தெரிவாகினர்.


