ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது – 2 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.!!!
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பெறுமதி ரூ. 2 கோடிக்கும் மேலாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், எப்பாவல நல்லமுதாவ வீதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சிறப்பு சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவல அதகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அதிபர் அருகிலுள்ள குளத்தில் வீசியிருந்த மின்னணுத் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஆகியனவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வட்டாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகரசபை உறுப்பினர் என்றும், மகனும் ஒரு மாதத்திற்கு முன் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.