சமூக சேவையும்; அரசியல் கலப்பும்.!!!
சமூக சேவை என்பது ஒரு மகத்தான, வரவேற்கத்தக்க, எல்லோராலும் நேசிக்கப்படுகின்றதொரு உச்சமானதும்,மகத்தானதுமான பணியாகும். இதற்கான கூலியை இறைவனால் மாத்திரமே வழங்க முடியும்.
சமூகத்தில் ஏற்படுகின்ற இடர் நிலைகளின் போது, ஒரு மனிதன் தொழில் ரீதியாக பாதிக்கப்படுகின்ற போது, நோய்வாய் படுகின்ற போது அந்த சமூகத்திற்கு அல்லது அந்த மனிதனுக்கு செய்கின்ற தட்டிக்கொடுக்கின்ற பணிகள், செயற்பாடுகள் அத்தனையுமே இந்த வட்டத்திற்குள்ளே அடங்கிவிடுகின்றது. இதையும் தாண்டி இன்னும் பல சேவைகளையும் குறிப்பிட முடியும்.
பிரதேசத்தில் காணப்படுகின்ற சமூக நலன்சார் தேவைகளை அடையாளம் கண்டு அல்லது அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவுகின்ற மனநிலை எல்லோர் மத்தியிலும் வேரூன்றி இருப்பதில்லை. அதுபோல எல்லோராலும் சமூகப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாது என்பது உண்மை. ஆகையால் ஒவ்வொரு சாராரும் தங்களால் முடிந்த பணிகளையும், பங்களிப்புகளையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வழங்கி வருவது என்பது நல்லதொரு ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்பி விட்டது என்ற பார்வை எல்லோர் மனதிலும் ஆழமாக ஊடுருவி நிலைத்து நிற்கின்றதொரு எண்ணக்கருவாகும்.
என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு அசாதாரண சூழ்நிலைகளில் எல்லோருமாக ஒன்றாய்ச் சேர்ந்து இந்த சமூகத்திற்கு எது தேவையோ அதனை செவ்வனே நிறைவேற்றிய வரலாறுகளும், சம்பவங்களும் எமது பிரதேசத்தில் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை நடந்தேறி வந்துள்ளது என்பது யாவருக்கும் தெரிந்ததொரு விடயமாகும்.
இன்றைய சூழலில் அரசியல் பிளவுகளும், போட்டித் தன்மைகளும் அதிகரித்து காணப்படுவதனால் புகைப்படங்களை பொதுவெளியில் உடனுக்குடன் பதிவேற்ற நினைக்கின்ற சில சமூக சேவகர்கள் அல்லது ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை முற்படுத்தியும், சிலரது செயற்பாடுகளை கொச்சைப்படுத்தியும் பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை அவதானிக்க முடிகின்றது.
எந்தத் தரப்பினர் எதைச் செய்தாலும் அது மக்களுக்கு பயன் தரக்கூடிய விதத்தில் அமையுமாக இருந்தால் மாற்றுத் தரப்பினர் அதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும், விட்டுக் கொடுப்பையும் செய்வது சாலச் சிறந்ததாகும். இல்லையேல் எந்த திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும், வாக்குவாதங்களும், வீண் பிரச்சனைகளும், சர்ச்சைகளும் உருவாகக்கூடிய நிலைமை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும், பிரதேச வாசிகளுமே ஆகும்.
பொதுப்பணி என்பது பெரும் தியாகத்தின் அடிப்படையில் இயங்குகின்ற ஒரு பெரும் பணியாகும். தமது நேர காலத்தை, தொழிலை, குடும்பத்தை தள்ளி வைத்து விட்டு இந்த சமூகத்திற்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை உள்ள ஒருவரினால் மாத்திரமே இந்த சமூகப் பணிகளை மக்களுக்காக வழங்க முடியும். சுயநலத்திற்காக இந்த சமூகப் பணிகளை மேற்கொள்கின்ற போது இந்த சமூகம் அடைய வேண்டிய தேவைகளை உரிய முறையில் அடைந்து கொள்ள முடியாத நிலை உருவாகிப் போகலாம். எனவே இந்த சமூகப் பணியில் பயணிக்கின்றவர்கள் ஒன்றுபட்டு செயற்படுவது அத்தியாவசியமாகிறது. இல்லையேல் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களே இந்த முரண்பாடுகளால் பெரிதும் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.
இது மாத்திரமன்றி, இந்த சமூகப்பணி என்பது பெரும் அமானிதமாகும். இந்த அமானிதத்தை சிலர் துஷ்பிரயோகம் செய்யும் விதத்தில் நடந்து கொள்வதை அவதானிக்க முடிகின்றது. கஷ்டத்தின் போது உதவி கேட்பவர்களை வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற நிலையும் உருவாகியுள்ளது.
இவைகளை அடையாளம் கண்டு சமூகப் பணி செய்கின்ற யாவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டியதும் அவசியமாகின்றது. இதற்காக ஏதாவது ஒரு பொது அமைப்பை அரசியல் கலப்படமில்லாமல் உருவாக்கி, வதைபடுகின்ற, துன்பப்படுகின்ற, அவஸ்த்தைப்படுகின்ற அல்லது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவுகின்ற, சமூக நலன் சார் விடயங்களை கையாளுகின்ற பொது அமைப்பை உருவாக்க வேண்டியதும், இதற்காக ஏதாவது பொது அமைப்பு முன்வந்து யாவரையும் ஒற்றுமைப்படுத்த பக்கபலமாக நின்று செயற்படுவதும் காலத்தின் கட்டாயமுமாகும்.
-எம்.ரி.எம்-