மனிதநேய அடிப்படையில் ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி: 208 பணியாளர்களை சந்தித்த கடற்படை – ஜனாதிபதி விளக்கம்.!!!
கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரானுக்குச் சொந்தமான இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (05) கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், என்ஜின் ஒன்று செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அந்த ஈரானிய கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வராமல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், அந்த கப்பலில் இருந்த 208 பணியாளர்களையும் இலங்கை கடற்படையினர் சந்தித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பின்னர் அவர்கள் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு. எந்த நாட்டிற்கும் சார்பாக செயல்படுபவர்கள் அல்ல. எங்கள் கடற்பரப்பில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நட்புறவை பேணும் நடுநிலையான நாடாக மனிதநேய அடிப்படையில் செயல்படுகிறோம்” என தெரிவித்தார்.
மேலும், இந்த விடயத்தை முன்னிட்டு அரசுக்கும் நாட்டிற்கும் எதிராக சிலர் அரசியல் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, அந்த கப்பலில் சிறுவர்கள் இருப்பதாகவும் அரசு அவர்களை கவனிக்கவில்லை எனவும் தகவல்கள் பரப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“இது போர் தொடர்பான உதவி அல்ல. மனித உயிர்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு மட்டுமே. சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.






