வாத்திமாரும் ஆலிம்ஷாக்ககளும்.!!!
மனிதர்களின் உயர்வுக்கு அச்சாணியாகவும், பக்கபலமாகவும் இருப்பவர்கள் வாத்திமார்களும், ஆலிம்ஷாக்களும் என்றால் மிகையாகாது.
ஆசிரியம் என்பது பாடசாலையிலோ அல்லது மத்ரஸாக்களிலோ தொடங்குபவை அல்ல. இதற்கான முதலாவது அத்திவாரம் தாயிலிருந்தே உருவாகின்றது எனலாம். பின் தந்தை குடும்பம் சமூகமென விரிந்து வியாபித்து நிற்கிறது. இந்த வட்டத்திற்குள்ளேதான் மனிதன் தனக்கான ஆரம்ப படிநிலையை, தேடலை எட்டிப்பிடிக்கின்றான். அத்தோடு புதுவிதமான அறிவுத் தேடலை நோக்கி நகர்கின்றான்.
பின்னர், சமூகமெனும் மைய்யப் புள்ளிக்குள் நகர்ந்து, பாடசாலை மற்றும் மத்ரஸா எனும் பாசறையில் உலாத்துகின்றான். “அ” என்ற உச்சரிப்போடும் “அலிப்” என்ற சொல்லோடும் தொடங்கி லெளகீக, ஆன்மீக கல்விக்குள்ளே சுற்றுகிறான்.
உண்மையில் ஆசிரியப் பணி என்பது ஒரு அற்புதமான, மகத்தான, யாவராலும் மதிக்கப்பட வேண்டிய, கெளரவப்படுத்தப்பட வேண்டியதொரு பணியாகும். அதுபோலவே ஆலிம்ஷாக்களும் தங்கள் கடமைகளையும், பொறுப்புக்களையும் கனகச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள்.
ஆன்மீக, லெளகீக கல்வியின் பக்கம் நகர்கின்ற மாணவர்களில் அநேகர் இன்று ஆசிரியர்களை, ஆலிம்களை கெளரவப்படுத்துவது என்பது குறைந்துவிட்டதாக அநேகர் கதைக்க நாம் கேற்கிறோம், கண்கூடாகவும் காண்கின்றோம்.
இன்று மாணவர் சமூகத்தில் அதீதமாக ஊடுருவி இருக்கின்ற மாயைதான் “நாகரீகம்” என்கின்ற கடும்போக்கு, இதையும் தாண்டி மாணவர்களை ஆட்சி செய்வது ஆடம்பரம் மீதான மோகமும், போதைக்கு அடிமையாகும் நிலையும். இதுபோன்ற இன்னோரன்ன விசித்திர முடிச்சுகளும் ஆகும்.
இன்றைய கல்விச் சூழலில் அனேகமான ஆசிரியர்களும், ஆலிம்களும் பெரும் தியாகத்தோடும், பொறுப்புணர்ச்சியோடும், கடமையுணர்வோடும் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தனது நேரம், காலம், அறிவு அத்தனையையும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே அதிகமதிகம் செலவிடுகின்றார்கள். தன் கடமை நேரத்தையும் தாண்டி மாணாக்கரின் வெற்றிக்காக பக்கபலமாக நிற்கின்றார்கள்.
ஒன்றை ஒரு மனிதன் அடைந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் நீண்ட தியாகங்களோடும், கூடுதல் முயற்சிகளோடும், பெருத்த கனவுகளோடும் செயற்பட வேண்டும். அப்போதே சாதனைகளையும், உயர்வுகளையும் அடைய முடியும். தான் கொண்ட இலக்கில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவது வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.
இன்றைய கால சூழலில் மாணவர்கள் போதைக்கும், இன்னோரன்ன செயற்பாடுகளுக்கும், நடத்தை பிறழ்வுகளுக்கும் தள்ளப்பட முக்கிய காரணிகளாக அமைவது ஓய்வுப் பொழுதை புறக்கீர்த்திய செயற்பாடுகளில் அல்லது இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தாமல் தேவையற்ற விடயங்களுக்குள்ளே ஊடுருவுவதே ஆகும். இதனால் தங்களது இளமையை சீரழித்து சின்னாபின்னமாக மாறவேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதற்காக ஆசிரியர்கள் மற்றும் ஆலிம்ஷாக்கள் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் தோற்றே போகின்றார்கள். காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள 33 பாடசாலைகளில் 7616 பெண் மாணவிகளும், 7395 ஆண் மாணவர்களும் பாடசாலைக் கல்வியை தொடர்கிறார்கள். அதுபோலவே பகுதிநேர, முழுநேர குர்ஆன் மனன பீட மத்ரஸாக்கள், மார்க்கக் கல்வி மத்ரஸாக்கள் பரந்தளவில் இருந்த போதிலும் மாணவர் சமூகம் சீரழிவது வேதனையே.
பாடசாலை மற்றும் மத்ரஸா என்பது வெறுமனே கல்வியை மட்டும் மாணவர் சமூகத்திற்கு ஊட்டுகின்ற அல்லது கொடுக்கின்ற ஒன்றல்ல. கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், நல்ல பண்புகளையும், ஆளுமை விருத்தியையும் விதைக்கின்றதொரு விளைநிலமாகும். இங்கே விதைக்கப்படுகின்ற ஆரம்ப அடியெடுத்து வைப்பானது ஒரு மாணவனின் இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால்தான் “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பார்கள்.
இன்றைய சூழலில் சில ஆசான்கள் மாணவர்களை கிண்டல் செய்வதும், நக்கல், நையாண்டி செய்வதும், கண்டுக்காமல் விடுவதும், வகுப்பறையில் ஒதுக்கி வைப்பதும், அதீத கவனமெடுக்காமல் தள்ளி வைப்பதும் மாணவர்கள் மனதளவில் பாதிப்புற, நடத்தை பிறழ்வுகளை காட்ட, வழிதவறிச் செல்ல காரணியாக அமைகிறது.
திறமை என்பது ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வகையாக மாறிக் கிடப்பவை. இவைகளை அடையாளம் கண்டு ஆசான்கள் மாணவர்களை வழிப்படுத்துவது அவசியமாகின்றது.
ஆக மொத்தத்தில் ஆசான்கள் மற்றும் ஆலிம்ஷாக்கள் மாணவர் நலனில் அதிகமதிகம் அக்கறை செலுத்தி உடைந்து போயுள்ள இந்த மாணவர் சமூகத்திற்கு புத்துயிர்ப்பை கொடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
-எம்.ரி.எம்-