ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பி ஓடிய திருடன் – மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்.!!!
(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் ஆட்டை திருடிய திருடன், அதை வாடகை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு ஆட்டுடன் தப்பிய சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகர் பகுதியில் கண்ணகை அம்மன் ஆலய வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடன் பிடித்து, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டு விட்டு, ஆட்டுடன் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி ஆட்டோவின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை விசாரித்துள்ளனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை நாள் வாடகையாக ரூ.1000க்கு வழங்கியதாகவும் இதுவரை திருப்பி தரப்படவில்லை என தெரிவித்தார்.
பின்னர் பொலிஸார் தேடுதல் நடாத்தியபோது, பள்ளிவால் அருகில் ஆட்டோவும் அதன் ஆவணங்களும் மீட்கப்பட்டது என பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், திருடன் ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பிய நிலையில், ஆட்டோ உரிமையாளர் கைது செய்யப்பட்டு, ஆட்டோ பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.