மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள்: தனியார் கல்வி நிலையங்களுக்கு இரு வாரத் தற்காலிகத் தடை – மாநகர முதல்வர்.!!!
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு தங்களின் கற்றல் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நடவடிக்கை, அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் நீண்டகாலப் பரீட்சை அழுத்தங்களிலிருந்து விடுபட்டு ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் மனநலம் மற்றும் உடல்நல பாதுகாப்பை முன்னிறுத்தியே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநகர எல்லைக்குள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களின் சுகாதார வசதிகள், கட்டிட பாதுகாப்பு நிலை மற்றும் கற்றல் சூழல் ஆகியவை மாணவர்களுக்கு உகந்தவையாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மாநகர சபை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு வார கால அவகாசத்தில் கல்வி நிலையங்கள் தங்களது உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, தற்காலிகத் தடை உத்தரவை மீறி செயற்படும் கல்வி நிலையங்களுக்கு மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.