உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

யெமனில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்; 31 பேர் உயிரிழப்பு.!!!

செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்பதாக யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்ததை அடுத்து யெமன் மீது அமெரிக்கா நடத்திய சரமாரி வான் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் பதவி ஏற்ற பின்னர் யெமன் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதலாக இது இருந்தது. கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் ‘நரக மழை பொழியும்’ என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

‘உங்களது நேரம் முடிந்துவிட்டது, இன்று தொடக்கம் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், இதுவரை காணாத வகையில் உங்கள் மீது நரக மழை பொழியும்’ என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூகதளத்தில் எச்சரித்துள்ளார்.

ஹூத்திக்களின் பிரதான ஆதரவாளரான ஈரான் மீதும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், அந்தக் குழுவுக்கு வழங்கும் ஆதரவை உடன் நிறுத்தும்படி குறிப்பிட்டார். அமெரிக்கா மீது ஈரான் அச்சுறுத்தலாக இருந்தால் ‘அமெரிக்கா முழுமையாக பதில் அளிக்கும் என்பதோடு அதில் நாம் மென்மையாக இருக்கமாட்டோம்’ என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை கண்டித்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, தமது வெளிநாட்டு கொள்கை தொடர்பில் ஆணை பிறப்பிக்க அமெரிக்காவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார்.

யெமனில் கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்த கடுமையான தாக்குதல்களில் மேலும் 101 பேர் காயமடைந்ததாக யெமன் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதில் யெமன் தலைநகர் சனா மற்றும் சவூதி அரேபியாவின் எல்லையில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக கருதப்படும் சாதா மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இராணுவ வசதி ஒன்று அமைந்திருக்கும் சானா விமானநிலையத்தை சூழவுள்ள பகுதியில் பாரிய தீப்பிளப்பு வெளியாவது உறுதி செய்யப்பட்டதாக பாடங்கள் காண்பிக்கின்றன.

இந்தத் தாக்குதலுக்கு பதிலளிக்காது விடப்படாது என்று ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனை அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பு என்றும் அமெரிக்காவின் கொடிய குற்றச்செயல் என்றும் அந்தக் கிளர்ச்சியாளர்கள் தமது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் உதவிகள் செல்லாது கடுமையான முற்றுகையில் ஈடுபட்டு தாக்குதல்களையும் அதிகரித்திருக்கும் நிலையிலேயே செங்கடலில் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஹூத்திக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது அந்தக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தியதோடு இது சர்வதேச வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு காசாவில் பெயித் லஹியாவில் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் ஊடகவியாளர்கள் மற்றும் படப்பிடிப்பாளர்களுடனான நிவாரண குழு ஒன்றை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. ஏற்கனவே ஸ்தம்பித்திருக்கும் போர் நிறுத்த முயற்சியை மேலும் பலவீனப்படுத்துவதாக இது மாறியுள்ளது.

காசாவில் கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்து 150 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக கடந்த 48 மணி நேரத்தில் 19 பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்தக் காலப்பகுதியில் இடிபாடுகளில் இருந்து மேலும் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 2023 ஒக்டோபர் தொடக்கம் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 48,543 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் காசாவுக்கான கரம் அபூ சலம் மற்றும் பெயித் ஹனூன் எல்லைக் கடவைகளை இஸ்ரேல் தொடர்ந்து 15 ஆவது நாளாக நேற்றும் முடக்கிய நிலையில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வது முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தீர்க்கமான நீர் உப்புநீக்கும் ஆலைக்கான மின்சாரத்தையும் இஸ்ரேல் துண்டித்திருப்பது காசாவில் நீர் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தும் நிலையில் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருவதோடு அதற்கு மாறாக எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் முதல் கட்ட போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு கோரி வருகிறது. இதனால் போர் நிறுத்தத்தை முன்னெடுப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

Related News

Total Websites Views

Total Views: 115962

Search

விளம்பரங்கள்