உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காத்தான்குடியில் சுனாமி பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம்.!!!

– எம்.ரி.எம். யூனுஸ் –

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி, இந்துசமுத்திரப் பரப்பில் அதிகாலை 6.29 மணியளவில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடமேற்கு பகுதியில் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புவிநடுக்கம், வரலாறு காணாத சுனாமி பேரலைக்கு காரணமாக அமைந்தது.

யாவா அகழியில் உருவான இந்த சுனாமி அலை, ஆரம்பத்தில் ஒருமீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 800 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, பின்னர் 10 மீட்டருக்கும் அதிகமான உயரமுடைய கோர அலைகளாக மாறியது. இதன் விளைவாக இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மார், சோமாலியா, மாலைதீவுகள், பங்களாதேஷ் உள்ளிட்ட 27 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இலங்கையின் கடற்கரைப் பகுதிகள் சுனாமியின் அகோர பசிக்கு இரையாகின. வடக்கில் சுழிபுரம் தொடங்கி கிழக்கு மற்றும் தெற்கு கரைகள் வரை பேரழிவு பரவியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கீரிமலை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை உள்ளிட்ட பல கரையோரப் பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.

முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சுனாமி ஏற்படுத்திய அழிவு அளவிட முடியாததாக இருந்தது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், ஒலுவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் உள்ளிட்ட பகுதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டன.

இலங்கையில் முதல் சுனாமி அலை காலை 8.27 மணியளவில் கல்முனையை தாக்கியது. பேரிரைச்சலுடனும் கரும்பச்சை நிறத்துடனும் கரையை நோக்கி வந்த அலை, ஆயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அம்பாறை மாவட்டத்தில் 10,436 பேரும், மட்டக்களப்பில் 2,777 பேரும், யாழ்ப்பாணத்தில் 2,075 பேரும், முல்லைத்தீவில் 1,700 பேரும், திருகோணமலையில் 1,078 பேரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் பதிவானது.

இறந்தவர்களில் பலர் கடலால் அள்ளிச் செல்லப்பட்ட நிலையில், சிலர் கட்டிட இடிபாடுகள், பற்றைக்காடுகள், வாய்க்கால்கள், மரங்கள் ஆகியவற்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டனர். வடக்கு – கிழக்கு பகுதிகளில் அவசரமாக உடல்கள் புதைக்கப்பட்ட சோக நினைவுகள் இன்றும் மக்களின் மனதில் நீங்காத துயராக நிலைத்திருக்கின்றன.

சுனாமி பேரலையால் வடக்கு – கிழக்கு பகுதிகளில் 51,152 வீடுகள் முற்றாக அழிவுற்றதுடன், 19,565 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதிக்குள்ளானனர்.

பல பாடசாலைகள் முற்றாக இடிந்து தரைமட்டமாகின. மாணவர்களின் கல்வி சாதனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீனவ சமூகமே இந்த பேரழிவின் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்தது. படகுகள், வலைகள் அழிந்ததுடன், நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சுனாமி ஆழிப்பேரலையின் 21ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, காத்தான்குடி பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இன்று (26) காலை நடைபெற்றது.

பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டதுடன், சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, கணக்காளர் ஏ.ஆர்.எம். முப்லி, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜறூப் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

21 ஆண்டுகள் கடந்தாலும், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் நினைவுகள் இன்றும் கரையோர மக்களின் மனதில் அழியாத துயராக பதிந்தே உள்ளது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், இந்த கோர தாண்டவ அலை மனித நினைவுகளில் இருந்து மறையாது என்பதே கசப்பான உண்மையாகத் திகழ்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 700017

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time