வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்ய முயன்ற 37 வயது நபர் கைது.!!!
-கற்பிட்டி – எம்.எச்.எம். சியாஜ்-
கொழும்பு கோட்டை சுங்கத் திணைக்களத் தலைமையகத்திற்கு முன்னால் உள்ள பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு முயற்சித்த வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகள் 30 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து, கடந்த வியாழக்கிழமை (15) மேற்கொண்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான ரங்கலவைச் சேர்ந்த கடற்படையினரும், மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரைச் சோதனையிட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் 30 வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளைக் கைப்பற்றியதுடன், குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட மின்னணு சிகரெட்டுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
