கல்விச் சேவையின் சிற்பி அதிபர் எம்.ஐ. சின்னலெப்பை: காத்தான்குடியில் நூல் வெளியீடு.!!!
-எம்.ஐ. அப்துல் நஸார்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய பிரபல கல்வியியலாளர் அதிபர் எம்.ஐ. சின்னலெப்பையின் வாழ்வியல் மற்றும் கல்விப் பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட **‘அதிபர் எம்.ஐ. சின்னலெப்பை – ஒரு கல்விச் சேவையின் சிற்பி’** எனும் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (16) காத்தான்குடியில் நடைபெற்றது.
சமூக சேவை மற்றும் கல்வி அபிவிருத்தி அமைப்பான ‘போரம்ஸ் பவுண்டேஷன்’ (Forums Foundation) ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் கே.ஜீ. அருளானந்தம் கலந்துகொண்டார்.
பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஜே.எம். மன்சூர், காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் பன்னூலாசிரியருமான எம்.எம்.எம். மஹ்ரூப் கரீம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் பதில் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார், ஓய்வுபெற்ற காத்தான்குடி பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண சபைச் செயலகத்தின் முன்னாள் செயலாளருமான எம்.சீ.எம். ஷரீப், பொறியியலாளர்களான எம்.எம். அப்துல் றகுமான் மற்றும் எம்.எம்.எம். பழுலுல் ஹக் ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. இலங்கையின் முன்னாள் தூதுவர் பி.எம். அம்சாவின் வாழ்த்துச் செய்தியை நிகழ்ச்சியை நெறிப்படுத்திய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதம அதிதி கே.ஜீ. அருளானந்தம் மற்றும் கலாநிதி ஏ.ஆர். ஜெஸ்மில் ஆகியோர் உரையாற்றினர்.
நூலின் திறனாய்வு மற்றும் ஆய்வுரையை ஓய்வுபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் நிகழ்த்தினார். அத்துடன், அதிபர் எம்.ஐ. சின்னலெப்பையின் மாணவர்களால் கவிதைகளும் வாசிக்கப்பட்டன.
நூல் வெளியீட்டு நிகழ்வுடன் இணைந்து சான்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சிகளையும் போரம்ஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், அதிபர் எம்.ஐ. சின்னலெப்பையின் குடும்ப உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கல்வியியலாளர் ஒருவரின் வாழ்வையும் சேவையையும் ஆவணப்படுத்தும் இந்நூல் வெளியீடு, அவரது கல்விப் பங்களிப்புகளை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக அமைந்தது.
















