ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் – பிரதமர் ஹரிணி அமரசூரிய.!!!
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இது நீதித்துறை சார்ந்த செயன்முறை என்பதால், நீதித்துறையிடமிருந்தே ஆலோசனைகளைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி எப்போதும் புத்திசாலித்தனமாகவும், நாட்டின் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்துகொண்டும் முடிவுகளை எடுப்பதாகத் தெரிவித்த அவர், நீதித்துறை, நாட்டின் மரபுகள் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு ஜனாதிபதி மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தற்போதும் எதிர்காலத்திலும் அரசியலமைப்பு, நீதித்துறை மற்றும் நாட்டின் மரபுகளுக்கு மதிப்பளித்தே ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்வார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.