காத்தான்குடியில் 5வது மாபெரும் இரத்ததான முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம்.!!!
—எம்.ரி.எம். யூனுஸ்—
காத்தான்குடி பகுதியில் சமூக நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் குபா விளையாட்டுக் கழகம் மற்றும் குபா இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த 5வது மாபெரும் இரத்ததான முகாம் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் இணைந்து இரத்த சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி அலிமா ரஹ்மான் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றதுடன், வைத்தியர் நித்திய நந்தனா அவர்களின் மருத்துவ பரிசோதனையில் இரத்தம் சேகரிக்கப்பட்டது.
சமூக நலத்தை முன்னிறுத்தும் இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இரத்தக் கொடையாளர்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கி மனிதநேய பணியில் பங்கெடுத்தனர்.
இத்தகைய இரத்ததான முகாம்கள் உயிர் காக்கும் பணியில் முக்கிய பங்காற்றுவதுடன், அவசர மருத்துவ தேவைகளுக்கு தேவையான இரத்தத்தை பெற்றுத் தருவதிலும் பெரும் உதவியாக அமைகின்றன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும் எதிர்காலத்திலும் இதுபோன்ற சமூக நல செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்வில் இரத்தத்தை தானமாக வழங்கிய குருதிக்கொடையாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினருக்கும் அவர்கள் வழங்கி வரும் சிறப்பான சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.















