பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம்: 27 பேர் பலி, 150 பேர் காயம்.!!!
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விசாஸ் (Visayas) பிராந்தியத்தில் நேற்றிரவ (30) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று (01) அதிகாலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதுடன், பிலிப்பைன்ஸின் செபு மாகாணத்தின் (Cebu Province) போகோ (Bogo) நகருக்கு அருகில் கடலின் அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இது மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெரும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள்
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் செபு தீவின் பல பகுதிகளில் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
போகோ நகரம் மற்றும் சன் ரெமிஜியோ (San Remigio) ஆகிய இடங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பாதுகாப்பிற்காக வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
நூறு வருடங்களுக்கு மேல் பழமையான தேவாலயம் ஒன்றும், விளையாட்டு மைதானம் ஒன்றும் உட்பட பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சேதமடைந்து அல்லது இடிந்து விழுந்தன.
நிலச்சரிவுகள் மற்றும் இடிபாடுகளால் வீதிகளில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டதுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்தான பல சிறுஅதிர்வுகள் (Aftershocks) உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் திறந்தவெளிகளில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுனாமி அபாயம் இல்லை
ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், குறிப்பிடத்தக்க கடல் மட்ட மாற்றங்கள் எதுவும் அவதானிக்கப்படாததால், பிலிப்பைன்ஸ் நில அதிர்வு நிறுவகம் (Phivolcs) சுனாமி எச்சரிக்கையை விலக்கிக்கொண்டது. இதனால், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சன் ரெமிஜியோ நகரில் உள்ளூர் அதிகாரிகள் அனர்த்த நிலையை (State of Calamity) பிரகடனப்படுத்தியுள்ளதுடன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், இடப்பெயர்ந்த மக்களுக்கு உணவு, நீர் உதவிகளை வழங்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாடு பசுபிக் வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களையும் எரிமலை குமுறல் செயற்பாடுகளையும் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


