பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் விபத்து — 7 பேர் காயம்; அனைவரும் பாதுகாப்பாக மீட்பு.!!!
நேபாள நாட்டைச் சேர்ந்த “புத்தா ஏர்” விமானம் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. காத்மாண்டுவிலிருந்து 55 பேருடன் புறப்பட்ட இந்த விமானம், ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலுள்ள புற்கள் மற்றும் சேற்றுப் பகுதியில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் துணை விமானி ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
ஜாப்பா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் லிம்பு வழங்கிய ஆரம்ப தகவலின்படி, காத்மாண்டு–பத்ராபூர் வழித்தடத்தில் 901 என்ற குறியீட்டுடன் இயங்கிய புத்தா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ATR-72 ரக விமானம், தரையிறங்கும் போது ஓடுபாதையைத் தாண்டி கிழக்கு திசையில் சுமார் 300 மீட்டர் தூரம் ஓடிச் சென்று புதர்கள் மற்றும் சேற்றுப் பகுதியில் சிக்கியது.
அந்த விமானத்தில் 51 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் மற்றும் ஒரு விமானி பயணம் செய்தனர். இவர்களில் லலித்பூரைச் சேர்ந்த 24 வயதான துணை விமானி சுஷாந்த் ஸ்ரேஸ்தா மற்றும் ஆறு பயணிகள் காயமடைந்தனர்.
விபத்து நடந்த உடனே தகவல் கிடைத்ததையடுத்து, ஜாப்பா மாவட்டக் காவல் அலுவலகத்திலிருந்து கண்காணிப்பாளர் லிம்பு தலைமையிலான 70 பேர் கொண்ட காவல் மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. காவல்துறையினர் அனைத்து பயணிகளையும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி, காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டனர்.
காயமடைந்தவர்கள் பத்ராபூரில் உள்ள ஓம் சாய் பதிபரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தலை மற்றும் முகத்தில் காயமடைந்த துணை விமானி ஸ்ரேஸ்தா, சிகிச்சை பெற்ற பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், மற்ற ஆறு பயணிகளும் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விமானம் இரவு 8.23 மணிக்கு காத்மாண்டுவிலிருந்து புறப்பட்டு, 9.10 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.









