ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 622 ஆக உயர்வு.!!!
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 622 ஆக உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அனர்த்தங்களில் சிக்கிய 1,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தற்போது 622 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் 6.0 ரிச்டர் நிலநடுக்கம்: குறைந்தது 10 பேர் பலி (8.18am)
ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியில் தாக்கிய 6.0 ரிச்டர் அளவிலான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 10 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமப்புற தூரப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் நங்கரஹார் மாகாணங்களில் நள்ளிரவில் நேரத்தில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தில் கிடைத்த தகவல்களின் படி, 20 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கம் ஜலாலாபாத் நகருக்கு 27 கிலோமீட்டர் தூரத்தில், 8 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) அறிவித்துள்ளது. அதன் பின்னர், நங்கஹாரின் பஸ்வால் பகுதியில் 4.5 ரிச்டர் அளவுடைய நில அதிர்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட நிலவரப்படி உயிரிழப்புகள் குறைவு எனத் தெரிவிக்கப்படும் நிலையில், காணாமல் போனோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்பதால், சேத மதிப்பீடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.



