க.பொ. த சாதாரண தரப் பரீட்சையில்; வரலாற்றுச் சாதனை படைத்த – மாணவர்கள் கௌரவிப்பு.!!!
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மர்ஹும் அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில் புதன்கிழமை (16) பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 70 வருட கால கல்வி பயணத்தில் முதற் தடவையாக “9 ஏ” விஷேட சித்தியைப் பெற்று சாதனை படைத்த மாணவன் எம்.எப். பர்வீஸ் அக்தார் மற்றும் “8 ஏ, சீ” சித்திகளை பெற்ற மாணவி எம்.என்.எப்.அப்ரா ஆகியோருக்கு பணப் பரிசு, நினைவுச் சின்னம் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு 5 ஏ க்கு மேல் சித்தி பெற்ற எட்டு மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு, சித்தி பெற்ற ஏனைய மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. எம்.அனீஸ், விஷேட அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.நௌஸாத், கௌரவ அதிதியாக புத்தளம் வலய கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் எம்.எம். எம்.இஸ்மத் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம்.எம்.பைஸர் மரிக்கார், அஸ்ரின் அலாவுதீன், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம். இஸ்வான் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் எம். என். எம். நிப்ரான் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை நினைவுச் சின்னங்களுக்கான அனுசரணை கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைஸர் மரிக்காரும், பதக்கங்களுக்கான அனுசரணை என். எம். பர்ஸாத் மற்றும் “9 ஏ” சித்தி பெற்ற மாணவனுக்கான பணப் பரிசை பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.என்.எம். நிப்ரான், “8 ஏ, சீ” சித்தி பெற்ற மாணவிக்கான பணப்பரிசை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.