ரியாத்தின் நிதியியல் மையத்தைக் குறிவைத்த ஹூதி ஏவுகணை; பிரமாண்டக் கட்டிடத்துக்குச் சேதம்.!!!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள நாட்டின் மிக உயரமான வானளாவிய கட்டிடங்களில் ஒன்றான பொது முதலீட்டு நிதியத்தின் (Public Investment Fund – PIF) தலைமையகக் கட்டிடம், வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சேதமடைந்துள்ளது.
ரியாத்தின் கிங் அப்துல்லா நிதியியல் மாவட்டத்தில் (KAFD) அமைந்துள்ள 80 மாடிகளையும், 385 மீற்றர் உயரத்தையும் கொண்ட PIF கோபுரத்தின் வெளிப்புறப் பகுதியில் இந்தச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கட்டிடத்தின் ஏழு முதல் எட்டு மாடிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறியதுடன், வெளிப்புற உலோகக் கட்டமைப்புகளும் வளைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அருகிலுள்ள சில குடியிருப்பு மற்றும் வர்த்தகக் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த சில வாரங்களாக குறித்த நிதியியல் மாவட்டத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருவதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிகாலை வேளையில் ரியாத் நகரில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கிங் அப்துல்லா நிதியியல் மாவட்டத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டதுடன், அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ரியாத்தை இலக்காகக் கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தல் இடைமறித்து முறியடிக்கப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மால்கி தெரிவித்துள்ளார்.
மேலும், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததன் காரணமாகவே கட்டிடங்களுக்குப் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 11 நாட்களுக்குள் ரியாத்தின் முக்கிய நிதியியல் மையமான கிங் அப்துல்லா நிதியியல் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, நவம்பர் 8ஆம் திகதி இதே வளாகத்தில் அமைந்துள்ள சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் கோபுரமும் தாக்குதலுக்கு உள்ளாகிச் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் ரியாத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளன.


