காத்தான்குடியில் கிராம மட்ட பிரஜா சக்தி தலைவர்களுக்கு; அதிகாரபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரஜா சக்தி சமுதாய அபிவிருத்தி சபை திட்டத்தின் கிராம மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று(16) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜா சக்தி சமுதாய அபிவிருத்தி சபை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கந்தசாமி பிரபு கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் அப்துல்லாஹ் அபிருத்திக்குழு தலைவரின் இணைப்பாளரும் சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளருமான எம்.பி.எம்.பிர்தெளஸ் நழீமி உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் மீன்பிடி அமைச்சின் இணைப்பாளருமான நசீர் உட்பட அதிகாரிகள் பிரஜா சக்தி தலைவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.















