மத்திய கிழக்கு பதற்றம்: ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலை சுமார் 2% உயர்வு.!!!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் மோதல் காரணமாக எண்ணெய் விநியோகம் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (05) ஆசிய வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளன.
அதன்படி, புதன்கிழமை ஒரு பீப்பாய்க்கு 74.66 அமெரிக்க டொலராக இருந்த மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை, GMT நேரப்படி இரவு 11.10 மணியளவில் 1.86 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 76.05 அமெரிக்க டொலராக பதிவானது.
இதேவேளை, முந்தைய நாள் ஒரு பீப்பாய்க்கு 81.40 அமெரிக்க டொலராக நிலையாக முடிவடைந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, வியாழக்கிழமை காலை நிலவரப்படி இன்னும் வர்த்தகமாகாத நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. உலகின் கடல்வழி மசகு எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழி வழியாகவே நடைபெறுகிறது. மேலும், கணிசமான அளவு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவும் (LNG) இதே வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கிடையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க கடற்படை எண்ணெய் டேங்கர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும், கப்பல் ஏற்றுமதி செய்பவர்களுக்கு அமெரிக்கா காப்பீடு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓமான் கடற்படை மொல்டா கொடியுடன் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கப்பலில் இருந்து 24 பணியாளர்களை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்திற்குள் எமிராட்டி மற்றும் ஓமானின் கடற்கரை அருகே கப்பல்களுக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது தாக்குதல் இதுவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட முக்கிய நீர்வழிப்பாதைகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
